Thursday, November 3, 2011

மந்திரங்கள் (சக்தி, கணபதி, சரஸ்வதி)


சக்தி மந்திரம்

ஓம் தேஜோஸி தேஜோ மயி தேஹி
         வீா்யமஸி வீா்யம் மயி தேஹி
         பலமஸி பலம் மயி தேஹி
         ஓஜோஸி ஓஜோ மயி தேஹி
        மன்யுரஸி மன்யும் மயி தேஹி
        ஸஹோஸி ஸஹோ மயி தேஹி ஓம்

இறைவா! நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.
நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஒழுக்கத்தைத் தருவாய்.
நீ உடல் சக்தியாக இருக்கிறாய், எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.
நீ தெய்வீக சக்தியாக இருக்கிறாய், எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய்.
நீ தைரியமாக இருக்கிறாய், எனக்கு தைரியத்தைத் தருவாய்.
நீ பொறுமையாக இருக்கிறாய், எனக்கு பொறுமையைத் தருவாய்.

கணபதி மந்திரம்

ஓம் கணானாம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே
க்விம் கவீனா முபமச்ரவஸ்தமம். ஜ்யேஷ்ட்டராஜம்
ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந ச்ருண்வன்
னூதிபிஸ்ஸீத ஸாதனம் மஹா கணபதயே நம ஓம்.

தேவா் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே! உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞா்களுள் பேரறிஞா், ஒப்பற்ற புகழ் படைத்தவர், முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர், வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிரார்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்காக விரைந்து வந்தருள்வீராக.  மகா கணபதியாகிய உமக்கு நமஸ்காரம்.

சரஸ்வதி மந்திரம்

ஓம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ
தீனாமவித்ர்யவது ஓம்.

வணங்குவோரைக் காப்பவளான சரஸ்வதி தேவி நம்மைக் காக்கட்டும்.
வாக்கு சக்திகளைத் தூண்டி அவள் நம்மை விழத்தெழச் செய்வாளாக.

Monday, September 19, 2011

அப்யாரோஹ மந்திரம் & மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்


அப்யாரோஹ மந்திரம் &  மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்

அப்யாரோஹ மந்திரம்

(அப்யாரோஹ என்றால் உயர்தல் என்று பொருள். அதாவது இம் மந்திரத்தை ஜெபிப்பவரின் நிலையை உயர்த்துகிறது இந்த மந்திரம்.)


ஓம் அஸதோ மா ஸத்கமய
          தமஸோ மா ஜ்யோதிர் கமய
          ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம்

ஸத் - உண்மை, அஸத் - உண்மையற்ற, தமஸ - இருள், மா - என்னை, ஜ்யோதி - ஒளி, கமய - அழைத்துச் செல், ம்ருத்யு -  மரணம், அம்ருதம் - மரணமில்லாத

பொருள்
உண்மையற்ற நிலையில் இருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக.  அறியாமை என்ற இருளில் இருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக.  மரணத்தில் இருந்து என்னை மரணமில்லா பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக.

மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்

(ம்ருத்யுஞ்ஜய என்றால் மரணத்தை ஜெயிப்பது என்று பொருள். அதாவது மரணத்தை வெல்வதற்கான மந்திரம் என்று இம்மந்திரம் அழைக்கப்படுகிறது. மேலும் வெளியே செல்லும் போது இம்மந்திரத்தை ஓதுவதால் விபத்துகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் என்று கூறப்படுகிறது.)

ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்ட்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் ஓம்.

ஸுகந்திம் - நறுமணம் கமழ்பவர், புஷ்டி வர்த்தனம் - உணவூட்டி வளர்ப்பவர், த்ர்யம்பகம் - மூன்று கண்கள் உடையவர், யஜாமஹே - போற்றி வழிபடுகிறோம், உர்வாருகம் இவ - வெள்ளரிப் பழம், ம்ருத்யோ - மரணம், பந்தனாத் - பிடியிலிருந்து, முஷீய - விடுபடுவோமாக, அம்ருதாத் - ஆன்மநிலையிலிருந்து.

பொருள்

நறுமணம் கமழ்பவரும், உலக உயிர்களை உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண் உடையவரும் ஆகிய சிவபெருமானைப் போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல மரணத்தின் பிடியில் இருந்து விடுபடுவோமாக.  நமது ஆன்ம நிலையில் இருந்து நாம் விலகாமல் இருப்போமாக. 

Saturday, September 17, 2011

சிவ மந்திரம்


சிவ மந்திரம் (யஜுர் வேதம்)

ஓம்
நம சம்பவே ச மயோபவே ச
         நம சங்கராய ச மயஸ்கராய ச
         நம சிவாய ச சிவதராய ச
ஓம்

பொருள் 

சம்பவே - உலக இன்பம், மயோபவே - மோட்ச இன்பம், சங்கராய ச - உலக இன்பத்தை தருபவர், மயஸ்கராய ச - மோட்ச இன்பத்தை தருபவர், சிவாய ச - மங்கல வடிவினர், சிவதராய ச - சிவமயம் ஆக்குபவர், நம - நமஸ்காரம்.

பொருளுரை

உலக இன்பமாகவும், மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும், மோட்ச இன்பத்தையும் தருபவரும், மங்கல வடிவமாக இருப்பவரும், தம்மை அடைந்தவர்களைச் சிவ மயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

Thursday, September 15, 2011

காயத்ரீ மந்திரம்


ஓம்
பூா் புவஸ்ஸுவ
தத் ஸ விதுா் வரேண்யம்
பா்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந 
ப்ரசோதயாத்
ஓம்

பொருள்
ஓம் - ப்ரணவ மந்திரம், பூா் புவ ஸுவ - மூன்று உலகங்கள், ய - யார்,  ந - நமது, திய - புத்தி, ப்ரசோதயாத் - தூண்டுபவர், ஸவிது - அனைத்தையும், தத் - அந்த, தேவஸ்ய - தெய்வத்தின், வரேண்யம் - சிறந்த, பா்க் - ஒளி வடிவம், தீமஹி - தியானிப்போம்.

விளக்கவுரை
ஓம் என்ற ப்ரணவ மந்திரமாகவும், பூ (பூமி), புவ (முன்னோர் வாழும் உலகம்), ஸுவ (தேவர்கள் வாழும் உலகம்) ஆகிய உலகங்களாகவும், அதில் இருக்கின்ற யார் நமது புத்தியை (அறிவினை) தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவை தியானிப்போம்.

இதில் பூ,புவ, ஸுவ என்ற மூன்றும் பூலோகம், பித்ருக்கள் (முன்னோர்கள்) வாழும் உலகம், சுவா்க்கலோகம் என்ற மூன்று உலகங்களை ஸ்தூல நிலையில் (பரு நிலையில்) குறிக்கின்றன. நமது சூட்சும நிலையில் (நுண் நிலையில்) நமது உணர்வின் மூன்று தளங்கள் அதாவது உடல், மனம், உயிர் ஆகிய மூன்று நிலைகளைக் குறிக்கின்றது.