Tuesday, December 21, 2010

திருமந்திரம் என்னும் பெருமந்திரம்

சைவ சமயத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் சாத்திரம், தோத்திரம் மற்றும் மந்திரம் என்னும் மூன்று நிலைகளிலும் சிந்திக்கத்தக்கதாகும். மந்திரம் என்று ஒரு நூலைக் குறிப்பிட்டோம் என்றால் அது திருமந்திரம் மட்டுமே. இந்நூலை இயற்றியவர் திருமூலர் என்பவர் ஆவார். இவர் பதினென்சித்தர்களுள் ஒருவர்.இவர் திருவாவடுதுறையை அடைந்து, ஈசனை வணங்கி மேற்குப்புறமாகச் சென்று படரரசின் கீழ் அமர்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் தவமிருந்து மூவாயிரம் பாடல்கள் அருளினார். அவரது பாடல்களில் சிலவற்றை இங்கு நாம் சிந்திப்போம்.

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
    நின்றனன் மூன்றினூள் நான்குசார்ந் தான் ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.

     சிவன் ஒருவனே, சக்தியோடு இரண்டாய், படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்) ஆகிய முத்தொழில் செய்து, நான்கு வேதங்களாய் விளங்கி, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து கண்மேந்திரியங்களை வென்று (அடக்கும் ஆற்றல் அளிப்பவன்), மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்து உடலில் கலந்து, ஏழாவதாகிய சகஸ்ராரம் என்னும் ஆதாரத்தில் (தலை உச்சியில்) பொருந்தி, 1.அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். 2.மகிமா - மலையைப் போல் பெரிதாதல். 3 இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல். 4. கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல். 5. பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல். 6 பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல். 7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். 8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல். போன்ற எட்டு சக்திகளும் பெற்றுள்ளவர், அவற்றை நமக்கு அருள்பவர் சிவபெருமான் ஒருவரே.  

2. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

     சிவகுருநாதனைச் ஜோதிப்பிழம்பாய் சிரசின்மேல் காணுதல் தெளிவினைத் தரும். அக்குருநாதனாகிய சிவபெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தைச் செபித்தல் தெளிவினை நல்கும்.  அக்குருவின் உபதேச மொழியைக் கேட்பது தெளிவை உண்டாக்கும். அதுபோலவே சிவபெருமானின் ஒளிமயமான திருவுருவை இடைவிடாது சிந்தித்தல் (நினைத்து) மனம் ஒன்றுதல் மிக்க தெளிவைத் தரும்.

3. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
    கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
    கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
    கல்லாத மூடர் கருத்தறி யாரே.

                  கல்லாத மூடர் (கல்வி கற்று சிவானுபவம் இல்லாத) மூடர்களைக் காணவும் கூடாது.  சிவத்தை உணராதவர்களைக் காணுதல் கூடாது.  அவர்கள் சொல்லும் சொற்கள் பயனற்றதாக இருக்கும் என்பதால் அவற்றை நாம் கேட்கவும் கூடாது. கற்றும் சிவனை உணராதவர்களைக் காட்டிலும்  கல்லாதார் (கல்வியறிவு இல்லாதவர்கள்) பிறரைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள் என்பதால் கல்லாதார் நல்லவரே. அவ்வாறு சிவத்தை அறியாத மூடர்கள் மெய்யான கருத்துக்கள் அறியார். 


Thursday, December 9, 2010

நமச்சிவாயத்தின் மகிமை

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.


ஞானம், கல்வி, நான் உணரும் இச்சை அனைத்தும் நமச்சிவாயமே.
அதனை எனது நாக்கால் நன்றாக உச்சரிப்பதன் மூலம்
அந்த நமச்சிவாயமே எனக்கு நன்நெறியைக் காட்டும்.

---அப்பா்.