Thursday, July 24, 2014

இறந்தவர்களுக்கான அஞ்சலி

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க 
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க 
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க 
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! 

ஜனனமும் பூமியில் புதியது இல்லை 
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை 
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை 
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை 

பாசம் உலாவிய கண்களும் எங்கே? 
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? 
தேசம் அளாவிய கால்களும் எங்கே? 
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக 
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க 
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக 
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க 

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை 
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை 
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை 
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை. 

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை 
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை 
நதி மழை போன்றதே விதியென்று கண்டும் 
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன! 

மரணத்தினால் சில கோபங்கள் தீரும் 
மரணத்தினால் சில சாபங்கள் தீரும் 
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் 
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் 

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் 
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் 
நித்திரை போவது நியதி என்றாலும் 
யாத்திரை என்பது தொடர்கதையாகும் 

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் 
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் 
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் 
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் 

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க! 
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க! 
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க! 
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

Saturday, January 5, 2013

சைவம் சமயமும் தத்துவமும் சைவ சித்தாந்தம்


வேத, சிவ ஆகமங்களின் அடிப்படையில் பிரிக்கப் பெற்ற நால்வகைச் சமயக் கொள்கைகளுக்கும் மேலாகச் சித்தாந்தம் என்ற கொள்கை தனித்து நின்றது.
சித்தாந்தம் என்ற சொல்லுக்குப் பொருள் முடிந்த முடிபு என்பர்.
இந்தக் கொள்கைக்குரிய இறைவன் சிவபெருமான் ஆவான்.
சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றன சிவ ஆகமங்கள் ஆகும்.
சிவஆகமங்கள் 28ம் சிறப்பாகக் கொள்ளப் பெற்றுச் சித்தாந்தக் கொள்கைள் வரையறுக்கப் பெற்றன.
சித்தாந்த நூல்கள் வேதங்களைப் பொது நூலாகவும், ஆகமங்களைச்சிறப்பு நூலாகவும் கொண்டு சித்தாந்தக் கொள்கைகளை வரையறுத்தன என்று கூறப்படுகின்றது.
பின்னால் சைவசித்தாந்தக் கொள்கைகளை வரையறுப்பதற்கு வேத ஆகமங்களோடு சைவத் திருமுறைகள் பிரமாண நூல்களாகக் கொள்ளப்பட்டன.
அவை சிவனருள் பெற்ற ஞானிகளால் பாடப்பெற்றன.
சைவ சித்தாந்த உண்மைப் பொருள்கள்
சைவ சித்தாந்தத்தில் கொள்ளப்படும் பொருள்கள் மூன்றாகும்.
அவை பதி, பசு, பாசம் என்பனவாகும்.
பதி - கடவுள், பசு - உயிர், பாசம் - உயிரைப் பிணிக்கும் கட்டு.
பதிப்பொருள் (கடவுள்) ஒன்று, உயிர்கள் - எண்ணற்றவை, பாசம் - ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும்.
இம்மூன்று பொருள்களும் தனித்தனியானவை.
பதியாகிய கடவுள் என்றும் உள்ளதுபோல மற்ற இரண்டும் என்றும் உள்ள பொருள்களாகும்.
இந்த முப்பொருள்களில் எந்த ஒன்றும் ஒருகாலத்தும் ஒன்றிலிருந்து
ஒன்று தோன்றவில்லை.
எனவே இம்மூன்றையும் அநாதி நித்தப்பொருள் என்பர்.
இந்த மூன்று பொருள்களைப் பற்றிய அடிப்படைக் கொள்கை
'இல்லது தோன்றாது உள்ளது அழியாது’ என்பதாகும்.
இதற்குச் சற்காரியவாதம் என்று பெயர்.
அதாவது மூன்று பொருள்களும் என்றும் உள்ளவை.
அதனால் தோன்றியுள்ளன.
அவை என்றும் உள்ளவை ஆதலால் அவை அழிவதுமில்லை எனக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று பொருள்களில்தான் ஏனைய பொருள்கள் தோன்றி ஒடுங்குகின்றன.
இம்மூன்று பொருள்களின் இயல்புகளே இலக்கணமாக வகுக்கப்பெறும்.
அது பொது இலக்கணம் என்றும் சிறப்பு இலக்கணம் என்றும் இரண்டு வகைப்படும்.
பொது இலக்கணத்தைத் தடத்த இலக்கணம் என்றும்
சிறப்பு இலக்கணத்தைச் சொரூபஇலக்கணம் என்றும் கூறுவர்.
இவ்விரண்டு இலக்கணங்களை விளக்குகின்ற பொழுது சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் வரையறுக்கப் படுகின்றன.
அளவைகள்
உலகத்துப் பொருள்களை எல்லாம்
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்ற அளவைகள் மூலம் அளந்து அறிந்து தெரியப்படுத்தல் உண்டு.
அதுபோலச் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைப் பொருள்களான பதி, உயிர், பாசம் என்ற
முப்பொருள்களை அளந்து அறிவதற்கு அளவைகள் பயன்படுகின்றன.
அந்த அளவைகளைக் கொண்டே முப்பொருள்களின் தத்துவங்களைச் சிவதத்துவ ஞானிகள் வகுத்துக் காட்டியுள்ளனர்.
மூன்று அளவைகளை.
அவை காட்சி, கருதல், உரையளவை என்பன.
“அளவை, காண்டல், கருதல், உரை என்று இம்மூன்றில் அடங்கிடுமே” என்று சிவஞான சித்தியார் குறிப்பிடும்.
காட்சி அளவை என்பது காண்டல் அளவை என்று குறிக்கப் பெறும்.
இதனை வடநூலார் பிரத்தியட்ச பிரமாணம் என்பர்.
எதிர்ப்பட்ட பொருளை அறிவதற்குக் கண்ணால் காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதுண்டு.
இதனையே காட்சி அளவை என்பர்.
அதாவது எந்தப் பொருளைக் கண்ணால் காண்கின்றோமோ அந்தப் பொருளை உள்பொருள் என்று உணர்வது.
‘கண்ணால் காண்பதே காட்சி’ என்பது பழமொழி.
தொலைவில் உள்ள ஓரிடத்தில் புகையைக் கண்ட ஒருவன் அங்கு நெருப்பு உண்டு என்று கருதுவது கருதல் அளவையாகும்.
இதனை அனுமான அளவை என்று கூறுவர்.
உரையளவை என்பது நூல்களின் வாயிலாகப் பொருள்களின் உண்மை நிலையை
அறிவது.
அதாவது இறைவனாலோ அல்லது ஞானிகளாலோ கூறப்பெற்ற (உரைக்கப் பெற்ற) நூல்களின் வாயிலாகப்பொருள்களின் நிலையை உணர்வது.
இம்மூன்று அளவைகளின் மூலமாகப் பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருள்களின் உண்மை நிலையைப் பற்றிச் சைவசித்தாந்த தத்துவ ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சைவ சித்தாந்தக் கொள்கைகள்
உலகத்தில் உள்ள பொருள்களை மூன்றாகக் காண்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இதில் காட்சி அளவையின் மூலம் உயிர்கள் உள் பொருள் என்பது உணரப்படுகிறது.
ஓரறிவு முதலாக ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் கண்ணால் காணப் பெறுபவையாகும்.
இந்த உயிர்கள் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன.
அவ்வாறு அனுபவிக்கின்ற பொழுது எல்லா உயிர்களும் ஒரே மாதிரியான இன்ப துன்பங்களை அனுபவிப்பதில்லை.
முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகள்தான் என்பதை அனுமான அளவையால் உணர்கின்றோம்.
இவ்வாறு இரு வினைகளுக்கு ஏற்ப உயிர்களை அனுபவிக்கச் செய்பவன் இறைவன் என்று இறைவனை அனுபவித்துக் கண்டறிந்த ஞானிகளின் கூற்றுகள் உரையளவையாகத்தருகின்றன.
இத்தகைய அளவைகள் மூலம் இறை, உயிர், பாசம் ஆகிய முப்பொருள்களின் தத்துவங்கள் சைவ சித்தாந்தத்தில் விளக்கப் படுகின்றன.
இறைவன் பற்றிய கொள்கைகள்
சைவத்தின் இறைவன் ஒருவனே ஆவான்.
அவன் பதி என்று அழைக்கப் படுகின்றான்.
இப்பதியே சிவன் என்றும் அழைக்கப்படுகிறது.
சிவம் என்ற சொல் மங்கலம் என்ற பொருளைத்தரும்.
எனவே நிறைவான நன்மையை உடையதாக, தீமையே இல்லாது விளங்குகின்றவன் என்ற பொருளைச் சிவன் என்ற சொல் தருகிறது.
இதனைத் திருநாவுக்கரசர், “சிவன் எனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்” எனக் குறிப்பிடுவார்.
இச்சிவனைக்கடவுள் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்ற வழக்கம் உண்டு.
கடவுள் என்றால் கடவுதல் என்பது ஒரு பொருள்.
உலகத்தை இயக்குவதால் அவருக்கு இப்பெயர் ஆயிற்று.
மற்றொரு பொருள் கடந்தவர் என்பதாகும்.
உலகத்துப் பொருள்கள் எல்லாவற்றையும் கடந்து மேம்பட்டவர் என்பதால் இப்பெயர்
ஏற்பட்டது.
மற்றொரு பொருள் உள்ளத்தைக் கடந்தவர் என்பதாகும்.
மனிதர்களின் உள்ளத்தைக் கடந்தவர் என்பதனாலும் இப்பெயர் உண்டாயிற்று.
கடவுள் உண்டு என்பதைச் சைவசித்தாந்தம் முதற்கண் விளக்கிச் செல்கிறது.
சித்தாந்த சாத்திரங்கள் பரபக்கம் என்ற தலைப்பில் கடவுள் இல்லை என்பாரின் கூற்றை மறுத்துக் கடவுள் உண்டு என்று நிறுவித் தங்கள் கொள்கைகளை வலியுறுத்துகின்றன.
கடவுள் உண்டு என்பதைப் பெரும்பாலும் சைவ சித்தாந்தம் அனுமான அளவையாலும் உரையளவையாலும் நிரூபிக்கிறது.
கடவுளின் தன்மைகள் தடத்த இலக்கணம், சொரூப இலக்கணம் என்ற வகையில் விளக்கப் பெறுகின்றன. இறைவனின் பொதுத் தன்மைகள் தடத்த இலக்கணமாகும்.
அவற்றைக் கீழ்வருமாறு குறிப்பிடலாம்.
இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன்.
அதாவது பிறப்பு, இறப்பு இல்லாதவன்.
உயிர்களைப் போல் மலங்களினால் என்றைக்கும் பிணிக்கப் படாதவன்.
இறைவன் ஓர் உருவமாகவோ, ஒரு பொருளாகவோ விளங்காது அதிசூட்சுமப் (உருவமற்ற) பொருளாக விளங்குபவன்.
படைத்தல் (உயிர்களை), காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் அவன் செய்கின்றான். அதைத் திருவிளையாடல் என்று குறிப்பிடுவர்.
மேலும் மறைத்தல், அருளல் என்ற இருதொழில்களை உயிர்களுக்கு அருளின் பொருட்டுச் செய்கின்றான்.
உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவ மலமாகும். அந்த மறைக்கும் ஆற்றலைத் தூண்டி உலக இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து தன்னைக் காட்டாது ஆணவ மலத்தின் சக்தி ஒடுங்க உயிர்களை அனுபவிக்கச் செய்வது மறைத்தலாம்.
அருளல் என்பது ஆணவமலம் அடங்க அடங்க உயிர்களை அருளை நோக்கி வரச்செய்தல் ஆகும்.
அவ்வாறு தொழில்களைச் செய்யும்போது தான் தனித்து நின்றும், உயிர்களோடு உடனாக நின்றும் செய்கின்றான்.
குறிப்பிட்ட உருவம் இல்லாதவன். தன் தொழில்களைச் செய்ய, உயிர்களுக்கு அருள் வழங்குதற்கு ஏற்ப வேண்டும் வடிவங்களை எடுத்துக் கொள்வதும் உண்டு.
அவ்வாறு உருவம் எடுப்பது உயிர்களுக்கு உதவும் பொருட்டே ஆகும்.
இறைவனின் உருவத்தைத் திருமேனி என்று கூறுவர்.
இவை மூன்றாகும். அருவம், உருவம், அருவுருவம் என்பவை அவை.
அருவம் என்பது கண்களுக்குப் புலப்படாதது. அவ்வாறு புலப்படாத சக்தியாய் நின்று இறைவன் உயிர்களுக்கு அருள்புரிகின்றான்.
உருவம் என்பது கண்களுக்குப் புலப்படுவது;
உயிர்களுக்கு ஞானம் தருகின்ற பொழுது ஞானாசிரியர் வடிவில் தோன்றி அருள்புரிவது.
அருவுருவம் என்பது புலப்பட்டும் புலப்படாதும் நிற்பது.
அதாவது நம் போன்றவர்களுக்குப் புலப்படாது ஞானிகளாகிய உயிர்களுக்குப் புலப்படுகின்ற திருமேனி.
இவ்அருவுருவ வடிவத்தை அறிவுறுத்துவதற்குத் திருக்கோவில்களில் இலிங்க வடிவம் அமைந்துள்ளது.
பொதுவாக, இறைவன் உருவமில்லாது இருப்பதுதான் அடிப்படை இலக்கணமாகும்.
தன் பொருட்டன்றி உயிர்களுக்கு அருள் தருவதற்காகவே இவ்வடிவத்தைப் பெறுகின்றான்.
இவ்வாறு என்றும் உள்ளவனாய்,
பிறப்பு இறப்பு அற்றவனாய்,
தனக்கென உருவம் அற்றவனாய்,
உயிர்களுக்கு அருளும் பொருட்டு மூவகைத் திருமேனிகளைக் கொண்டவனாய்,
ஐந்து தொழில்களைச் செய்கின்றவன் இறைவன் ஆவான்.
இறைவன் குணங்களாக எட்டினைக் குறிப்பிடுவர். அவை :
1) தன்வயத்தனாதல் :
சுதந்திரம் உடையவனாய் விளங்குதல்.அதாவது பிறர் வயப்பட்டுச் செயல்புரியாது அனைத்திலும் சுதந்திரமுடையன் ஆதல்.
2) இயற்கை உணர்வினன் ஆதல் :
அனைத்தையும் தானே அறியும் தன்மை உடையவன் ஆதல்.
3) முற்றுணர்வினன் ஆதல் :
ஒருகாலத்தில் அனைத்துப்பொருள்களையும் அறிந்து நிற்றல். அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப்பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.
4) அளவிலா ஆற்றல் உடையவன் ஆதல் :
எச்செயலையும் எக்காலத்தும் செய்ய வல்லமை உடையவன் ஆதல்.
5) வரம்பிலா இன்பம் உடையவன் ஆதல் :
பேரின்பம் உடையவனாய் விளங்குதல்.
6) பேரருள் உடையவன் ஆதல் :
பயன் கருதாது அருள்வழங்கும் தன்மை உடையன் ஆதல்.
7) இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல் :
பாசம் என்னும் கட்டுக்குள் இறைவன் சேர்தலில்லை.
8) தூய இயல்பினன் ஆதல் :
பாசம் சாராத காரணத்தால் குற்றங்களுக்குரிய உடம்பு இல்லாது தூய உடம்பை உடையவன் ஆதல்.
இறைவன் இவ்வாறு எட்டுக்குணங்களை உடையவன். அவன் அருள் புரிகின்ற பொழுது சக்திநிலையில் அருள் புரிகின்றான். இச்சக்திதான் பெண் வடிவம்.
ஆனால் இறைவன் வேறு, சக்தி வேறு அல்ல.
இறைவன் ஒருவன் என்றாலும், சிவம், சக்தி என்ற இரு தன்மைப்பட்ட நிலைகளில்
நின்று முன்குறித்த ஐந்து தொழில்களைச் செய்கின்றான்.
இதற்கு உவமை சூரியனும், சூரியஒளியும் ஆகும்.
இந்தச் சக்தியின் மூலமாக இறைவன் அருளுகின்ற போது அருளவேண்டிய
உயிர்களுக்கு ஏற்ப அருளுகின்றான்.
உயிர் பற்றிய கொள்கைகள்
கடவுளைப் போல உயிரும் அநாதியானது. அதாவது அழிவில்லாதது என்பது பொருள். கடவுள் இல்லையென்று மறுப்பவர்கள் உயிர் இல்லை என்று உறுதியாக மறுப்பதில்லை. எனவே உயிர் உள்பொருளாகும். இதனைப் பசு என்ற சொல்லால்
குறிப்பர். பசு என்பது கட்டுப்பட்டிருப்பது என்ற பொருளைத்தரும். வீட்டுத் தொழுவத்தில் பசு எவ்வாறு கயிற்றால் கட்டப்படுகிறதோ அதுபோலப் பாசம் என்ற மலங்களால் கட்டப்படுவதால் உயிர், பசு என அழைக்கப்படுகிறது.
உயிரானது தானே அறிந்தும் அறிவித்தும் நிற்பதுமாகிய கடவுளும் அன்று; அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று;
அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருளாகும்.
அறிவே வடிவாகிய கடவுள் சித்துப் பொருள் என்றும்,
அறிவே இல்லாத சடப் பொருள்களாகிய பாசங்கள் அசித்து என்றும் கூறப்படும்.
இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகிய உயிர் சதசித்து என்று கூறப்படும்.
உயிர்கள் எண்ணற்றவையாகும். அவை யாராலும் படைக்கப்பட்டதும் இல்லை. அவற்றிற்குத் தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை.
தானே உணர்கின்ற ஆற்றல் இல்லாதது.
அறிவிக்க அறியும் அறிவுடையதால் சிற்றறிவு என்றும் கூறப்படும்.
இவ்வுயிரைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று குறிப்பிடுவதும் உண்டு.
உயிரின் நிலைகளை அவத்தைகள் என்று குறிப்பிடுவர்.
அவத்தை என்ற சொல்லுக்கு நிலை என்பது பொருள்.
இந்த நிலைகளைக் காரண அவத்தை என்றும், காரிய அவத்தை என்றும் இருவகையாகக் கூறுவர்.
காரண அவத்தை மூன்று வகைப்படும். அவை கீழ்வருமாறு கூறப்படுகின்றன.
(1) கேவல அவத்தை :
ஆதிகாலம் தொட்டு ஆணவமலத்தோடு இருக்கின்ற உயிரின் நிலை கேவல அவத்தை எனப்படும்.
(2) சகல அவத்தை :
மாயையினால் உடம்பைப் பெற்று உலகப் பொருளை நுகர்வது சகல அவத்தையாகும்.
(3) சுத்த அவத்தை : பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை சுத்த அவத்தை எனப்படும்.
இம்மூன்று நிலைகளில் உயிரானது நிற்பது கூறப்படுவதால் காரண அவத்தையாயிற்று.
அடுத்து, காரிய அவத்தை என்பது உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகும். செயல்படுவது கேவலம் முதலிய மூன்றிலும் நிகழும். அவ்வாறு செயல்படும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் ஐந்தாகச் செயல்படும். எனவே கேவலம் முதலிய மூன்றிலும் ஐந்து செயல்நிலைகள் அமைந்து பதினைந்து காரிய அவத்தைகள் ஆகின்றன. பொதுவான ஐந்து காரிய அவத்தைகள் கீழ்வருமாறு :
1) நனவு :
இது வடமொழியில் சாக்கிரம் என்ற சொல்லப்படும். இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
2) கனவு : சொப்பனம் என்று கூறப்படும். இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர்
செயல்படும்.
3) உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
4) பேருறக்கம் : இது துரியம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து
செயல்படும்.
5) உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது கீழாலவத்தை என்பர். சுத்த நிலையில் செயல்படும் பொழுது மலோலவத்தை என்பர்.
சகலத்தில் செயல்படும் பொழுது மத்தியாலவத்தை என்பர்.
இவ்வாறு கடவுளைப் போல அநாதியாய்த் தோன்றி என்றும் உள்பொருளாகி எண்ணற்றவைகளாய் விளங்கி, சார்ந்ததன் வண்ணமாகி, உணர்த்த உணரும் தன்மை
உடையதாய், மூன்று நிலைகளில் நின்று, ஐந்துவகை நிலையில் செயல்படுவது உயிராகும்.
அளவில்லாத உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உயிரின் அடிப்படைநிலை பாசங்களோடு விளங்குவதாகும்.
அப்பாசங்கள் மூன்றாகும். அவை ஆணவம், கன்மம், மாயை என்பன.
இம்மூன்று பாசங்களோடு சேர்ந்திருப்பதைக் கொண்டு உயிர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன.
ஆணவத்தோடு மட்டும் நிற்கும் பொழுது விஞ்ஞானகலர் என்று அழைக்கப் படும்.
ஆணவம், கன்மம் என்ற இரண்டோடு நிற்கும்பொழுது பிரளயாகரர் என்று அழைக்கப்படும்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களோடு நிற்கும் பொழுது சகலர் என்று அழைக்கப்படும்.
இவ்வாறு மூன்று வகைப்பட்ட உயிர்கள் இன்ப, துன்ப, பிறப்பு, இறப்புகளுக்கு ஆட்பட்டு உழல்வது செயற்கைநிலை. இறைவனின் அருளுக்கு ஆட்பட்டு மாறாத பேரின்பத்தைப் பெறுதல் இயற்கைநிலை.
இந்த உயிர் தன் வினைக்கு ஏற்பப் பல்வகைப் பிறப்புகளுக்கு ஆளாகிறது;
இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது; இறுதியில் இறைவனின் திருவருளுக்கு ஆளாகிறது.
பாசம்
சைவசித்தாந்த முப்பொருள்களில் பாசம் என்பது மூன்றாவது பொருளாகும். இதனைத் தளை என்றும் கூறுவர். பாசத்தளை என்று சேர்த்துச் சொல்வதும் உண்டு. பாசம் என்பது கயிற்றைக் குறிக்கும். தளை என்பது கட்டுவதைக் குறிக்கும். எனவே கட்டப் படுகின்ற கயிறு என்ற நிலையில் பாசங்கள் குறிக்கப் படுகின்றன.
இப்பாசங்கள் மூன்று வகைப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை எனப்படும்.
ஆணவம் என்பது முதலாவது. செம்பு என்ற உலோகப் பொருள் என்றைக்கு உண்டோ அன்றே அதற்குக் களிம்பு இருப்பது போல, உயிர் என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவம் உண்டு. எனவே இதனை மூலமலம் என்று குறிப்பிடுவர்.
ஆணவம் என்ற சொல் சைவசித்தாந்த அடிப்படையில் செருக்கு என்ற பொருளைத்
தராது.
உயிரை அறியாமைப்படுத்தும் நிலையைக் குறிக்கும். சிறிது விளக்கமாகச் சொன்னால் கண்ணை மறைக்கின்ற இருள்போல உயிர்கள் எதிரில் உள்ள பொருள்களை அறிய முடியாத நிலையில் அவ்வுயிர்களுக்கு அறியாமையைத் தருவது ஆணவமாகும்.
இது ஆணவத்தின் முதல் நிலையாகும். அதாவது உயிர்களின் அறிவு,இச்சை, செயல் என்ற மூன்றனையும் நிகழவிடாது தடுத்து உயிர் என்ற ஒன்றே உண்டு என்பதே தோன்றாதவாறு மறைத்துத் தானேயாய் நிற்பது ஆணவமாகும். இதுதான் உயிர்களின்
கேவலநிலை என்றும் ஆணவத்தின் முதல்நிலை என்றும் கூறப்படும்.
பின், கன்மம், மாயை இவற்றோடு சேர்ந்து அறிவைத் தடுக்கும்பொழுது இரண்டாவது நிலையை அடைகிறது. அதாவது மங்கலான ஒளியினில் கண்களானது பொருள்களைத் தவறாகக் காண்பது போன்றதாகும். இது உயிரின் சகலநிலை என்றும், ஆணவத்தின் இரண்டாவது நிலை என்றும் கூறப்படும். இவ்வாறு ஆணவ நிலை இரண்டு வகைப்படும்.
ஆணவமலம் என்பது பிறபொருளைக் காட்டாது மறைப்பதோடு தன்னையும் காட்டுவதில்லை. நெல்லுக்கு உமிபோல, செம்பினில் களிம்புபோல, உயிர்களைத் தோற்றத்தின் காலத்திலேயே பற்றிவிடுகின்ற ஆணவம் இறுதிவரை உயிர்களைப்பற்றி நின்று இறுதியில் உயிர்கள் இறைவன் அருளைப் பெறுகின்ற பொழுது அடங்கி நிற்குமே தவிர அழிவதில்லை. ஆணவத்தின் மறைப்பால் தன்னிடத்தில் நிறைந்து நின்ற கடவுள் அருளை அறியாத உயிர், ஆணவம் அடங்கி அறிவு மறைத்தலை ஒழித்தவுடன் பேரானந்தத்தைப் பெறுகிறது.
இரண்டாவது பாசம், கன்மம் ஆகும். உயிரில் ஆதியாய் நிற்பது ஆணவமலம். மற்ற கன்மம், மாயை என்பவை இடையில் வந்து சேருவன ஆகும். எனவே இதனை ஆகந்துக மலம் என்பர். இவ்விரண்டு மலங்களும் ஆணவ மலம் அடங்கும் காலத்து
நீங்கிவிடும். கன்மம் என்பது வினை என்றும் ஊழ் என்றும் சொல்லப்படும்.
உயிர்கள் வினையை அனுபவித்தே ஆகவேண்டும். இந்தக் கன்மமாகிய வினைதான் பிறப்புக்கும், அதன்கண் உளவாகும் இன்ப துன்ப வினைக்கும் காரணமாகும்.
எனவே உயிர்களின் அறிவை மறைத்தல் ஆணவமலம் என்று கூறுவதுபோல் உயிர்களின் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைப்பது கன்மம் எனக் குறிப்பிடலாம்.
வினையானது சடப்பொருள், அறிவற்றது. எனவே செய்தவனைத் தேடி அடையாது. ஆகவே இறைவன்தான் வினைகளை உயிர்களிடத்தில் அடைவித்து இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கின்றான்.
ஒரு பிறப்பில் செய்த நல்வினை, தீவினை அடுத்தடுத்த பிறப்பில் நன்மை தீமைகளைச்
செய்வதால்தான் வினையை ஊழ்வினை என்கின்றனர். நல்வினை, தீவினை இரண்டுமே பிறப்பைத் தரும் என்பது உணரத்தக்கது.
வினைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முற்பிறப்புகளில் உயிரால் செய்து ஈட்டப் பெற்ற நல்வினை, தீவினை இரண்டும்
சஞ்சிதம் (பழவினை) எனப்படும்.
எடுத்த இப்பிறவியில் அனுபவிக்கும் வினை பிராரத்தம் (நுகர்வினை) எனப்படும்.
இப்பிறவியில் செய்கின்ற அறம், பாவங்களால் மேலும் ஏற்படுகின்ற வினை ஆகாமியம் (ஏதுவினை) எனப்படும்.
இவ்வாறு கன்ம வினைகள் செய்வதாகிய உயிர், செய்யப்படுவதாகிய வினை,
வினையின் பயன், அந்தப் பயனைக் கொண்டு உயிர்களிடத்தில் சேர்ப்பவனாகிய கடவுள் என்ற நான்கின் அடிப்படையில் வினைக்கோட்பாடு சித்தாந்தத்தில் கூறப் பெறுகின்றன எனலாம்.
மூன்றாவது மலமாகிய மாயையும் உயிர்களிடத்தில் இடையில் வந்து இணைவதாகும்.
இம்மாயை உள்பொருள் ஆகும்.
நித்தப்பொருள்.
கண்ணுக்குப் புலன் ஆகாத அருவப் பொருள்.
உலகத்திற்கு வித்தாக அமைவது.
உயிருக்கு உடல், கருவி, நுகர்ச்சிப்பொருள் ஆகியவற்றைத் தருவது. ஆணவத்தால்
மறைக்கப்பெற்ற உயிரைச் சிறிது விளக்கம் செய்வது. ஆணவத்தின் கொடிய செயலை நீக்குவதற்கு இறைவனால் பயன்படுத்தக் கூடியது.
ஒருபொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
முதற்காரணம்,
துணைக்காரணம்,
நிமித்த காரணம் என்பன அவை.
உதாரணமாக மண்குடம் என்ற ஒரு பொருள் தோன்ற மண் முதற்காரணம்,
குயவன் நிமித்தகாரணம்,
அவன் உபயோகிக்கும்
கருவிகள் துணைக்காரணம்.
அதுபோலத்தான் உலகம் தோன்ற மாயை முதற்காரணம், இறைவன் நிமித்தகாரணம், அவனுடைய சக்தி துணைக் காரணம்.
ஒரு பெரிய ஆலமரத்தின் உற்பத்தி ஒரு சிறிய விதையில் அடங்கியிருப்பது போல இவ்வுலகத்து அம்சங்கள் யாவும் சூட்சுமப் பொருளாகிய மாயையுள் அடங்கிக் கிடக்கின்றன.
இம் மாயையை இறைவன் தன் சக்தியினால் இயக்க இதில் படிப்படியாக 36 தத்துவங்கள் தோன்றுகின்றன. 36 தத்துவங்கள் என்பன மாயையிலிருந்து தோன்றும் பொருள்கள் ஆகும்.
இவ்வாறு தோன்றும் பொருள்களை 3 வகையாகப் பிரிப்பர்.
அவை சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என்பன.
சுத்த மாயையிலிருந்து ஐந்து தத்துவங்கள் தோன்றுகின்றன. அவை :
சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை ஆகும்.
இவை ஐந்தும் இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களாகும்.
ஆதலால் இவை சிவதத்துவம் எனப்படுகின்றன.
அடுத்த அசுத்த மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் 7 ஆகும். அவை :
காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பனவாகும்.
இவை வித்யா தத்துவங்கள் எனக் கூறப்பெறும். இவையனைத்தும் உயிரினுடைய நிலைகள் தோன்றுவதற்குரிய தத்துவங்கள் ஆகும்.
பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் 24 ஆகும். அவை : அந்தக்கரணங்கள் நான்கு,
ஞானேந்திரியங்கள் ஐந்து,
கன்மேந்திரியங்கள் ஐந்து,
தன்மாத்திரைகள் ஐந்து,
பூதங்கள் ஐந்து ஆகியனவாம்.
இந்த 36 தத்துவங்கள் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோன்றுகின்றன. இவை தோன்றி உலகத்தை இயங்க வைக்கின்றன.
இதர தத்துவங்கள்
உயிரானது பிறப்பெடுத்து உலகத்தில் பெறுகின்ற இன்பம் உலக இன்பமாகும். பல பிறப்புகளின் இறுதியில் இறைவனின் அருளைப் பெறுகின்ற இன்பம் பேரின்பம் எனப்படும். இதனை, போகம் என்றும் மோட்சம் என்றும் குறிப்பிடுவர்.
துன்பத்துடன் கூடிய இன்பம் முன்னது.
துன்பம் கலவாத இன்பம் பின்னது.
துன்பம் கலவாத இன்பமான பேரின்பத்தைப் பெற இறைவன் அருள்வழங்க வேண்டும். இறைவன் அருள் பெறக்கூடிய சூழலைச் சத்திநிபாதம் என்று குறிப்பிடுவர். சத்திநிபாதம் என்றால் இறைவனுடைய அருள் பதிதல் என்பதாகும். இந்த நிலை அடைய வேண்டுமானால் உயிர்களிடத்தில் இன்பத்தையும், துன்பத்தையும்
ஒன்றாகக் கருதும் நிலை ஏற்படவேண்டும்.
அதாவது இன்பத்தால் மகிழாது, துன்பத்தால் துவளாது இரண்டையும் எவ்வித உணர்வுமின்றி எல்லாம் பிறப்பின் நிலை, அனுபவித்தே ஆகவேண்டும் என நினைப்பதாகும். இதை அடைய வேண்டுமானால்
சரியை,
கிரியை,
யோகம்,
ஞானம் என்ற நான்கு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதல் மூன்றும் உயிர்கள் செய்யவேண்டிய செயல்பாடுகள்.
சரியை என்பது உடம்பால் இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வது. கிரியை என்பது இறைவனுடைய வடிவங்களை, மூர்த்தங்களைப் பூசனை
செய்யும் முறையாகும்.
யோகம் என்பது இறைவனையே நினைந்து தவமிருத்தல்.
இம்மூன்று நிகழ்வுகளையும் கடைப்பிடித்தால் இறைவனின் வடிவாகிய ஞானாசிரியரால் ஞானம் பெறலாம். ஞானம் பெறுவதால் சத்திநிபாதம் (வீடுபேறு) கிடைக்கும்.
நால்வகை நெறிகளில் ஐந்தெழுத்து மந்திரங்களை மெய்ப்பொருளாக உணர்ந்து உச்சரித்தல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிவாயநம என்பது அந்த ஐந்தெழுத்தாகும்.
சி - என்பது சிவத்தையும்,
வா - என்பது சக்தியையும்,
ய - என்பது உயிரையும்,
ந - என்பது மறைத்தலையும்,
ம - என்பது மலத்தையும் குறிப்பனவாகும்.
இந்த ஐந்தெழுத்தை ஞானாசிரியர் வழங்க அதன் மூலம் உபதேசத்தைப் பெற்று உயிர்கள் தத்தம் தகுதிக்கு ஏற்ப உச்சரித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது
கொள்கையாகும்.
இவ்வாறு உயிர்கள் பல்வேறு பிறப்பெடுத்து இறுதியில் சிவபெருமான் திருவடிகளை அடைந்து அவன் திருவருளில் திளைத்து மாறா இன்பத்தில் அமர்ந்திருப்பது வீடுபேறு
எனக் கொள்ளப்படும்.
அந்நிலையில் உயிர் தன் தன்மையில் கெடாது பேரின்பத்தை அனுபவிக்கும். உயிர் அழிவதில்லை.

Thursday, November 3, 2011

மந்திரங்கள் (சக்தி, கணபதி, சரஸ்வதி)


சக்தி மந்திரம்

ஓம் தேஜோஸி தேஜோ மயி தேஹி
         வீா்யமஸி வீா்யம் மயி தேஹி
         பலமஸி பலம் மயி தேஹி
         ஓஜோஸி ஓஜோ மயி தேஹி
        மன்யுரஸி மன்யும் மயி தேஹி
        ஸஹோஸி ஸஹோ மயி தேஹி ஓம்

இறைவா! நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.
நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஒழுக்கத்தைத் தருவாய்.
நீ உடல் சக்தியாக இருக்கிறாய், எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.
நீ தெய்வீக சக்தியாக இருக்கிறாய், எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய்.
நீ தைரியமாக இருக்கிறாய், எனக்கு தைரியத்தைத் தருவாய்.
நீ பொறுமையாக இருக்கிறாய், எனக்கு பொறுமையைத் தருவாய்.

கணபதி மந்திரம்

ஓம் கணானாம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே
க்விம் கவீனா முபமச்ரவஸ்தமம். ஜ்யேஷ்ட்டராஜம்
ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந ச்ருண்வன்
னூதிபிஸ்ஸீத ஸாதனம் மஹா கணபதயே நம ஓம்.

தேவா் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே! உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞா்களுள் பேரறிஞா், ஒப்பற்ற புகழ் படைத்தவர், முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர், வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிரார்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்காக விரைந்து வந்தருள்வீராக.  மகா கணபதியாகிய உமக்கு நமஸ்காரம்.

சரஸ்வதி மந்திரம்

ஓம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ
தீனாமவித்ர்யவது ஓம்.

வணங்குவோரைக் காப்பவளான சரஸ்வதி தேவி நம்மைக் காக்கட்டும்.
வாக்கு சக்திகளைத் தூண்டி அவள் நம்மை விழத்தெழச் செய்வாளாக.

Monday, September 19, 2011

அப்யாரோஹ மந்திரம் & மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்


அப்யாரோஹ மந்திரம் &  மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்

அப்யாரோஹ மந்திரம்

(அப்யாரோஹ என்றால் உயர்தல் என்று பொருள். அதாவது இம் மந்திரத்தை ஜெபிப்பவரின் நிலையை உயர்த்துகிறது இந்த மந்திரம்.)


ஓம் அஸதோ மா ஸத்கமய
          தமஸோ மா ஜ்யோதிர் கமய
          ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம்

ஸத் - உண்மை, அஸத் - உண்மையற்ற, தமஸ - இருள், மா - என்னை, ஜ்யோதி - ஒளி, கமய - அழைத்துச் செல், ம்ருத்யு -  மரணம், அம்ருதம் - மரணமில்லாத

பொருள்
உண்மையற்ற நிலையில் இருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக.  அறியாமை என்ற இருளில் இருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக.  மரணத்தில் இருந்து என்னை மரணமில்லா பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக.

மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்

(ம்ருத்யுஞ்ஜய என்றால் மரணத்தை ஜெயிப்பது என்று பொருள். அதாவது மரணத்தை வெல்வதற்கான மந்திரம் என்று இம்மந்திரம் அழைக்கப்படுகிறது. மேலும் வெளியே செல்லும் போது இம்மந்திரத்தை ஓதுவதால் விபத்துகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் என்று கூறப்படுகிறது.)

ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்ட்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் ஓம்.

ஸுகந்திம் - நறுமணம் கமழ்பவர், புஷ்டி வர்த்தனம் - உணவூட்டி வளர்ப்பவர், த்ர்யம்பகம் - மூன்று கண்கள் உடையவர், யஜாமஹே - போற்றி வழிபடுகிறோம், உர்வாருகம் இவ - வெள்ளரிப் பழம், ம்ருத்யோ - மரணம், பந்தனாத் - பிடியிலிருந்து, முஷீய - விடுபடுவோமாக, அம்ருதாத் - ஆன்மநிலையிலிருந்து.

பொருள்

நறுமணம் கமழ்பவரும், உலக உயிர்களை உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண் உடையவரும் ஆகிய சிவபெருமானைப் போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல மரணத்தின் பிடியில் இருந்து விடுபடுவோமாக.  நமது ஆன்ம நிலையில் இருந்து நாம் விலகாமல் இருப்போமாக. 

Saturday, September 17, 2011

சிவ மந்திரம்


சிவ மந்திரம் (யஜுர் வேதம்)

ஓம்
நம சம்பவே ச மயோபவே ச
         நம சங்கராய ச மயஸ்கராய ச
         நம சிவாய ச சிவதராய ச
ஓம்

பொருள் 

சம்பவே - உலக இன்பம், மயோபவே - மோட்ச இன்பம், சங்கராய ச - உலக இன்பத்தை தருபவர், மயஸ்கராய ச - மோட்ச இன்பத்தை தருபவர், சிவாய ச - மங்கல வடிவினர், சிவதராய ச - சிவமயம் ஆக்குபவர், நம - நமஸ்காரம்.

பொருளுரை

உலக இன்பமாகவும், மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும், மோட்ச இன்பத்தையும் தருபவரும், மங்கல வடிவமாக இருப்பவரும், தம்மை அடைந்தவர்களைச் சிவ மயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

Thursday, September 15, 2011

காயத்ரீ மந்திரம்


ஓம்
பூா் புவஸ்ஸுவ
தத் ஸ விதுா் வரேண்யம்
பா்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந 
ப்ரசோதயாத்
ஓம்

பொருள்
ஓம் - ப்ரணவ மந்திரம், பூா் புவ ஸுவ - மூன்று உலகங்கள், ய - யார்,  ந - நமது, திய - புத்தி, ப்ரசோதயாத் - தூண்டுபவர், ஸவிது - அனைத்தையும், தத் - அந்த, தேவஸ்ய - தெய்வத்தின், வரேண்யம் - சிறந்த, பா்க் - ஒளி வடிவம், தீமஹி - தியானிப்போம்.

விளக்கவுரை
ஓம் என்ற ப்ரணவ மந்திரமாகவும், பூ (பூமி), புவ (முன்னோர் வாழும் உலகம்), ஸுவ (தேவர்கள் வாழும் உலகம்) ஆகிய உலகங்களாகவும், அதில் இருக்கின்ற யார் நமது புத்தியை (அறிவினை) தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவை தியானிப்போம்.

இதில் பூ,புவ, ஸுவ என்ற மூன்றும் பூலோகம், பித்ருக்கள் (முன்னோர்கள்) வாழும் உலகம், சுவா்க்கலோகம் என்ற மூன்று உலகங்களை ஸ்தூல நிலையில் (பரு நிலையில்) குறிக்கின்றன. நமது சூட்சும நிலையில் (நுண் நிலையில்) நமது உணர்வின் மூன்று தளங்கள் அதாவது உடல், மனம், உயிர் ஆகிய மூன்று நிலைகளைக் குறிக்கின்றது.